Thursday, April 4, 2013

வீரத்தின் வித்தான வீரபத்திரர் வழிபாடு

 

“ஆளுடைத் தனி ஆதியை நீத்தொரு
வேள்வி முற்ற விரும்பிய தக்கனோர்
நீள் சிரத்தை நிலத்திடை வீட்டிய
வாள் படைத்த மதலையைப் போற்றுவாம்”


இப்படி திருச்செந்தூர்ப் புராணத்தால் வீரபத்திரக் கடவுள் போற்றப்படுகிறார். இங்கே வீரபத்திரப் பெருமான் கையில் வாளுடன் விளங்குவதாகவும், பரம்பொருளை நிந்தனை செய்து நாஸ்தீகத் தனமாக வேள்வி செய்த தக்கப் பிரஜாபதியின் கொட்டத்தை அழித்த வீரராகவும் போற்றப்படுகிறார்.  இப்பெருமானின் வணக்க முறைமை இந்துக்களின் வீரத்தின் சாட்சியாகவும், வீரத்தின் விளை நிலமாகவும் விளங்குகிறது.

சிவனாய செல்வன்

வீரம் என்பதற்கு அழகு என்றும் பத்திரம் என்பதற்குக் காப்பவன் என்றும் பொருள் கொண்டு வீரபத்திரர் என்பதற்கு அழகும் கருணையும் கொண்டு அன்போடு காப்பவர் என்று பொருள் காண்பர் சைவச் சான்றோர்.
இந்த வீரபத்திரப் பெருமானின் வழிபாடு பாரதம் எங்கும் அதற்கு அப்பாலும் பரவியிருக்கிறது. சிவபெருமான் ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், ஸத்யோஜாதம் என்கிற ஐந்து திருமுகங்களைக் கொண்டு ஐந்தொழிலாற்றுகிறான். இம்முகங்களில் அகோராம்சமாக ஆணவாதி மலங்களை அழிப்பதற்காக வீரபத்திரரைப் படைத்தான் என்று குறிப்பிடுவர்.
மரகத மணிநீலம் கிண்கிணீ ஜாலபத்தம்
ப்ரகடித ஸமுகேச’ம் பானு ஸோமாக்னி நேத்ரம்
… சூ’ல தண்டோக்ர ஹஸ்தம்
விருதல மஹிபூஷம் வீரபத்ரம் நமாமி
என்று வீரபத்திரர் பற்றிய ஒரு தியானஸ்லோகம் சொல்கிறது. இதில், மரகத மணியில் ஒளியுடையவர், கிண்கிணி அணிந்த கழலினர், சூரியன், சந்திரன், நெருப்பு இவை மூன்றையும் முக்கண்களாய் கொண்டவர், சூலம், தண்டம் ஆகியவற்றை ஏந்தியவர் அழகியவரான (கோரம் என்பதன் எதிர்ச் சொல் அகோரம்) வீரபத்திரரை வணங்குவோம் என்று சொல்லப் பெற்றிருக்கிறது.
வீரபத்திரரை திருஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் ஆகிய தேவாரமுதலிகளும் மாணிக்கவாசகரும் பலவாறாக, தேவாரங்களில் பெயர் சுட்டாமல் போற்றிப் பாடியிருக்கிறார்கள்.  வீரபத்திரர் வரலாற்றுச் செய்திகளை முழுவதும் புராணக்கதைகள் என்று ஒதுக்குவது சிறப்பாகத் தெரியவில்லை. இவற்றில் பல தத்துவச் செய்திகள் இருப்பினும், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த, நடக்கக் கூடிய செய்தியாகவே இதனைக் காண முடிகிறது.
வட மாநிலத்தில் ஹரித்வாரில் தான் தக்ஷன் யாகம் செய்ததும் தாக்ஷாயணி யாக குண்டத்தில் விழுந்ததும் நடந்ததாய்க் கூறுகின்றனர். கங்கால் என்ற பெயரில் உள்ள இடத்தில் தக்ஷேஸ்வர மஹாதேவர் என்ற பெயரில் ஈசன் கோயில் கொண்டிருக்கிறார்.
இங்கே தான் வீரபத்திரரும் காளியும் தக்ஷனையும் அவன் கூட்டத்தாரையும் அழித்ததாயும் கூறுகின்றனர். தக்ஷன் சாகாவரம் பெற்றிருந்ததால் அவன் தலையை வெட்டி அதற்குப் பதிலாக ஆட்டுத் தலையை வைத்ததாகவும் கூறுவார்கள். மேலும் இங்கே சதிகுண்டம் என்ற பெயரிலேயே குண்டம் ஒன்றும் இருக்கிறது.

வீர சைவர்களின் வீரன்

சைவப்பெருமக்கள் வீரபத்திரரை சிவகுமாரராகவும், சிவாம்சமாகவும், சிவவடிவமாகவும் (சிவமூர்த்தமாகவும்) கண்டு வழிபட்டு வருகிறார்கள். தட்சனின் யாகத்தை நிர்ரூலம் செய்து சிவபரத்துவத்தை நிலை நிறுத்த அவதரித்த மூர்த்தியே வீரபத்திரர் என்பதே பரவலாகப் பேசப்படும் கருத்து நிலையாக இருந்தாலும், வீரபத்திரர் குறித்து நமது புராணங்களில் மேன் மேலும் பல செய்திகள் சொல்லப்பெற்றிருப்பதைக் காண முடிகிறது.
விநாயகர், முருகன் போலவே சைவர்களின் சிறப்பிற்பிற்குரிய வழிபடு தெய்வமாக அமைந்திருக்கிற வீரபத்திரரின் வரலாறும் வழிபாட்டு முறைமையும் விநாயகர், முருகக் கடவுளுக்கு இருப்பது போலவே பரந்ததாகவும், ஆழமானதாகவும் பல செய்திகளை உள்வாங்கியதாகவும் அமைந்திருப்பதைக் காணலாம்.
யஜூர் வேதத்தின் உயிர்நாடியாக விளங்குகிற ஸ்ரீ ருத்ரத்தினை அடுத்து வரும் சமகம் தட்சனால் பாடப்பெற்றது என்றும் சிலர் நம்புகிறார்கள். அதற்கு ஆதாரமாக அவர்கள் அதில் வரும் “மே” என்ற சப்தத்தையே எடுத்துக் கொள்கிறார்கள். இது கொஞ்சம் சுவாரஸ்யமாக இருப்பினும் சிந்திக்கத்தக்கது.
அவர்கள் கூற்றின் படி, சிவபெருமானால் மறு உயிர் பெற்ற ஆட்டுத் தலை கொண்ட தக்ஷன் சிவனைத் துதித்துப் பாடியது தான் யஜுர் வேதத்தின் முக்கிய பகுதியாகிய ஸ்ரீ ருத்ரத்தினை அடுத்து வரும் சமகம் என்பது. ஒவ்வொரு பதத்திலும் ஆட்டின் சப்தமாகிய “மே” என்ற சப்தம் வரும் வகையில் அமைந்தது. ‘மே’ என்றால் வேண்டும் என்பது அர்த்தமாகும். “ச’ஞ்சமே மயச்’சமே ப்ரியஞ்சமே” என்று ஒவ்வொரு பதத்திலும் “மே” என்று அமையும்.
அந்தகாசுரனை சம்ஹாரம் செய்வதற்காக வீரபத்திரர் சப்தமாதர்களுடன் சென்று அவனைப் பொருது வென்றார் என்றும், சிங்க உருவம் பூண்டு நீலன் என்ற அரக்கனை அழித்தார் என்றும், இவரைப் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன.
வீரபத்திரர் தக்கனை அழித்துப் பின் உயிர்பெற்றெழச் செய்த போது அவனது தலையானது யாககுண்டத்தில் இடப்பட்டு அழிந்து விட்டதால் அவனுக்கு ஆட்டுத்தலை பொருத்தி உயிர்ப்பித்தார் என்பர். இது உறுப்புக்களை மாற்றிப் பொருத்தும் இன்றைய சத்திர சிகிச்சையுடனும் இணைத்துச் சிந்திக்கத் தக்கதாயிருக்கிறது.
மகாபாரதத்தின் சாந்திபருவத்திலும், மத்ஸயபுராணயத்தின் 72-ம் அத்தியாயத்திலும், பாகவதபுராணத்திலும், லிங்கபுராணம், வராஹபுராணம், கூர்மபுராணம், போன்றவற்றிலும் வீரபத்திரரைப் பற்றிய செய்திகள் நிறைவாக இருக்கின்றன.
வீரபத்திரரை வீரசைவர்கள் தங்கள் பிரதான குருவாகக் கொண்டு போற்றி வழிபடுகிறார்கள். கும்பகோணத்தின் மகாமகக் குளத்தருகில் வீரபத்திரர் கங்காதேவியைக் காக்கும் பொருட்டு இறைவன் கட்டளைப்படி எழுந்தருளியிருப்பதாக வீரசைவர்கள் நம்புகின்றனர். அங்கே பரசிவனே வீரபத்திரருக்கு சிவதீட்சையும் லிங்கதாரணமும் செய்து, வீரசிங்காசனத்தில் அமர்வித்து, வீரசைவமரபு உருவாக வழி செய்தான் என்பதும் நம்பிக்கை.

காவலாய் நிற்கும் கடவுள்

சிவப்பரம்பொருளின் ஜடையிலிருந்து பிறந்தவர் என்றும் வியர்வையிலிருந்து பிறந்தவர் என்றும் வீரபத்திரரின் அவதாரம் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன. இது எவ்வாறாயினும், வீரபத்திரர் சிவாம்சம் என்றே பொதுவான கருத்து நிலை அமைந்திருக்கிறது.
ஆந்திரா எங்கும் வீரபத்திரர் வழிபாடு பரவியிருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஸ்ரீ சைலம் மல்லிகார்ஜூன ஸ்வாமியை ஆந்திர மக்கள் மல்லர் என்று போற்றுவதுடன் அவரை வீரபத்திரர் என்றே கருதி வழிபடுகின்றனர்.
விஜய நகர அரசரான ஹரிஹரரின் காலத்தில் கன்னடத்தில் இராகவையங்கார் என்பவர் வீரபத்திரர் வரலாறு பற்றி “வீரேச விஜய” என்ற நூலைப் படைத்திருக்கிறார். (பொ.பி 1400களில்) பத்ரகாளியை வீரபத்திரரின் தோழியாகவும், மனைவியாகவும் போற்றுவர். சரபேஸ்வரர் என்பதும் வீரபத்திரர் நரசிங்கப் பெருமானைச் சாந்தப்படுத்த எடுத்த மூர்த்தமே என்று கொள்வர். யோகப்பயிற்சியிலும் “வீரபத்ராசனா” என்று ஒரு வகை ஆசனம் அமைந்திருக்கிறது.
தமிழகத்தில் சென்னையிலும் கும்பகோணத்திலும் திருவானைக்காவிலும் இன்னும் எத்தனை எத்தனையோ கிராமங்களிலும் வீரபத்திரருக்கு ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. முக்கிய சிவாலயங்களில் எல்லாம் வீரபத்திரர் தனிச்சந்நதி கொண்டு அருள் பாலிக்கிறார்.
இது போலவே, வீரபத்திரமூர்த்தி காவல் தெய்வமாக சேத்திரபாலகராக வழிபாடாற்றப்பெறுவதும் உண்டு. சென்னை வில்லிபாக்கம் அகத்தீஸ்வரர் கோயிலில் அகத்தியரின் சிவபூஜையைக் காப்பதற்காகவும், மூகாம்பிகை கோயிலில் அம்பாளைக் காப்பதற்காகவும் வீரபத்திரர் எழுந்தருளியிருப்பதாகச் சொல்லப்பெறுகிறது.
முகலாயப்  படையெடுப்பாளர்கள் மதவெறி கொண்டு தென்னகத்துச் சிவாலயங்கைள எல்லாம் அழித்தும் சூறையாடியும், இறுதியில் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் புகுந்தார்களாம். அங்கே தூணில் அமைந்திருக்கிற அஷ்புஜ அக்னி அகோர வீரபத்திரரின் வனப்பையும் நேர்த்தியான வேலைப்பாட்டையும் கண்டு பொறாமல் அதனை உடைக்க முற்பட்டார்களாம். அப்போது, அந்த வீரபத்திரர் ஜீவ ஓட்டம் மிக்கவராக எழுந்து மிகுந்த கோபக்கனலைச் சிந்தி முகலாயப் படைகளை ஓட ஓட விரட்டியதாகவும் சொல்லப் பெறுகிறது.
தமிழ் இலக்கியங்களும் நாட்டாரியலும் ஏத்தும் திறன் வீரபத்திரர் குறித்த பல செய்திகள் நமது தமிழ் இலக்கியங்களிலும் காணக்கிடைக்கின்றன. செவ்வைசூடுவார் பாரதத்தில் வீரபத்திரர் எழுச்சியும் வீரச்செயலும் பேசப்படுகிறது.
சூடாமணி நூலில் வீரபத்திரரின் பெயர்களாக
“உக்கிரன் அழல்க்கண் வந்தோன்
ஊமைமகன் சிம்புள் ஆனோன்
முக்கண்ணன், சடையோன், யானை
முகவற்கு இளையோன், வில்லி
செக்கர் வான் நிறத்தோன், குரோதன்,
சிறுவிதி மகம் சிதைத்தோன்
மிக்கப் பத்திரைக் கேள்வன்,
வீரபத்திரன் பேராமே”
என்று பன்னிரு பெயர்கள் பேசப்பட்டிருக்கின்றன.
கர்நாடக நாட்டுப்புறவியலில் “வீரகசே” என்ற கூத்து மரபு பேணப்பட்டு வருகிறது. இதே போல இலங்கையில் யாழ்ப்பாணத்து கட்டுவன் பகுதியில் பாரம்பரியமான வீரபத்திரக் கூத்து அப்பகுதியில் வதியும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரால் ஆடப்பட்டு வருகிறது. இவைகளில் வீரபத்திரர் வரலாறு கூத்து வடிவில் காண்பிக்கப்படுகிறது.

கவிச்சக்கரவர்த்தி ஒட்டக் கூத்தர் வீரபத்திரப்பரணி என்ற தக்கயாகப்பரணி பாடியிருக்கிறார். பரணி என்பது போர் குறித்த நூலாயினும் வீரபத்திரரை முன்னிறுத்தி இந்நூல் அவர் தம் பெருவீரத்தைப் புகழ்ந்து பாடுகிறது.
வீரபத்திரர் பற்றி சிறப்பாகப் பேசும் நூல்களில் “சைவசித்தாந்தக் களஞ்சியமாக” கச்சியப்ப சிவாச்சார்யார் பாடிய “கந்தபுராணம்” முதன்மையானது. கந்தபுராணத்தின் கந்தன் வரலாற்றுக்கு ஆதாரக் கதையாக வீரபத்திரர் வரலாறு பேசப்பட்டிருக்கிறது.
இறைவனை மதியாது தக்கன் செய்த யாகத்திற்குச் சென்று அவிர்பாகம் பெற்றதால் தான் சூரபத்மனால் தேவர்கள் துன்புற நேர்ந்தது என்று சொல்லி கந்தன் கதைக்கு ஆதாரமான கதையாக வீரபத்திரர் வரலாறு இங்கு எழுச்சி உணர்வுடன் எடுத்துரைக்கப்பெற்றிருக்கிறது.
“அடைந்தவி உண்டிடும் அமரர் யாவரும்
முடிந்திட வெருவியே முனிவர் வேதியர்
உடைந்திட மாமகம் ஒடியத் தக்கனை
தடிந்திடும் சேவகன் சரணம் போற்றுவாம்”

என்று கந்தபுராணம் கடவுள் வாழ்த்திலே வீரபத்திரக் கடவுளைப் போற்றுவதுடன் அமையாது, சிறப்பாக தட்ச காண்டத்தில் வீரபத்திரர் வரலாறு குறித்து விரிவாகப் பேசுகிறது. அவற்றுள்ளும் உமை வரு படலம், வேள்விப்படலம், வீரபத்திரப்படலம், யாகசங்காரப்படலம் ஆகியன சிறப்பாக வீரபத்திரர் தக்கன் வேள்வி அழித்த வரலாறு பேசப்பட்டிருக்கிறது.
“அந்திவான் பெரு மேனியன் கறைமிடற்றணிந்த
எந்தை தன் வடிவாய் அவனுதல் விழியிடை
வந்து தோன்றியே முன்னுற நின்றனன் மாதோ
முந்து வீரபத்திரன் எனும் திறலுடை முதல்வன்”
பார்த்த திக்கினில் கொடுமுடி ஆயிரம் பரப்பிச்
சூர்த்த திண்புய வரையிரண்டாயிரம் துலக்கி
போர்த்த தாள்களில் அண்டமும் அகண்டமும் பெயர
வேர்த்தெழுந்தனன் வீரரில் வீரன்”

இப்பாடல்களில் கச்சியப்ப சிவாச்சார்யாரின் கவி ஆளுமையும் பக்தியும் வீரபத்திரப் பெருமான் பேரெழுச்சியும் சிறப்பாகப் புலப்படுகிறது. வீரபத்திரருக்கும் வாகனம் நந்தியே.. சிவ வடிவமான வீரபத்திரர் அந்தணரும் அரசரும் மட்டும் பணியும் கடவுள் அல்லர். அவர் பழங்குடி மக்களின் சிறுகுடில் தோறும் கல் வடிவிலும் , திரிசூல வடிவிலும் நின்று இந்த மக்களுள் மக்களாகிக் காக்கிற கருணைக் கடவுள்.

கருணையின் கடவுள்

வீரபத்திரப் பெருமானின் அவதார நோக்கங்கள் தர்மம் தவறியவரை, இறைவனை மதியாது தாமே என்று இறுமாப்புக் கொண்டவர்களை அழிப்பதாக அமைகின்றன. ஆனால், இவற்றின் முக்கிய நோக்கம் அவர்கள் பேரில் கொண்ட பெருங்கருணையேயாம்.
வைணவர்களுக்கு நரசிம்மாவதாரம் எத்துணை சிறப்புப் பெற்றதோ, அத்துணை சிறப்புடையவராக சைவர்கள் வீரபத்திரரைக் கண்டு வழிபடுகிறார்கள். இங்கெல்லாம், இறைவனின் இயல்பான பெருங்கருணை வெளிப்படுகிறது.
தவறு செய்தாரைத் தண்டித்துத் திருத்துவது என்பது அவர் இனி வரும் நாளில் தவறு செய்யாமலிருக்க உதவும். அவருக்குக் கிடைத்த தண்டனையைக் கண்டவர்கள் தாமும் வாழ்வில் தவறு இழைக்காமலிருக்க உதவும். சில வேளைகளில் இறைவனின் இந்த அவதாரங்களின் போது அசுரர்கள் இறந்து போயினும், அவர்கள் இன்னும் இன்னும் இங்கிருந்து தவறே புரிந்த வாழாமல் அவர்கள் பேரில் தமது திருக்கைகளை வைத்துப் பரமபதம் அனுப்பியதாய் அமையும்.
இதுவன்றி, ஒருவன் செய்கிற தவறுகளைக் கண்டும் காணாமல் விட்டு விடுவது தான் அவன் மேன்மேலும் தவறுகள் செய்வதற்கு ஊக்குவிப்பாக அமைந்து அவனை கீழ்நிலைக்கு இட்டுச் செல்லும், ஆக, வீரபத்திரப் பெருமானின் செயல்கள் கருணையின் உயர் நிலையிலிருப்பதையே காணலாம்.
செவ்வாய்க்கிழமைகளில், பரணி நாள்களில், அஷ்டமித் திதிகளில் வீரபத்திரரைச் சிறப்பாக வழிபாடு செய்கிற வழக்கம் இருக்கிறது. தும்பைப்பூமாலை சாற்றியும் வெண்ணெய் அணிவித்தும் வணக்கம் செலுத்துவர். கிராமங்களில் பறை முழங்க, பாமரமக்கள் தெய்வீக உணர்வில் திழைத்துக் கூத்தாட நிசி தாண்டும் வரை நடக்கிற வீரபத்திர வழிபாடு எழுச்சி மிக்கதாயிருக்கிறது.
வீரபத்திரர் வெளித்தோற்றத்தில் உக்கிரமாக இருந்தாலும், அவர் மிகவும் குளிர்ச்சியான உள்ளம் படைத்தவராக இருக்கிறார் என்பதை அவரது உடலில் உள்ள ஜீவராசிகளும் காட்டி நிற்கின்றன. குளிர்ச்சியான இடத்தில் மட்டுமே வசிக்கும் தேள்கள் இவருக்கு மாலையாகின்றன. சிலந்திப்பூச்சி இவருடலில் விளையாடி மகிழ்கிறது. பதின்நான்கு பாம்புகள் அங்கங்கள் தோறும் ஆபரணமாகின்றன. இவை இயற்கையுடன் இணைந்த தெய்வீகத் தோற்றமாகவும், குளிர்ச்சியின் பிரதிபலிப்பாகவும் அமைகின்றன.
அநேகமான வீரபத்திரர் ஆலயங்களில் பெருமானின் அருகில் தட்சன் கூப்பிய கரங்களுடன் வழிபாடாற்றும் நிலையிலான திருவுருவத்தையும் அமைத்திருப்பார்கள். தவறே செய்த தட்சனுக்கும் தயை செய்து காத்த பேரருட் திறனை இது வெளிப்படுத்துகிறது.
வீரம் என்பது பல்திறப்படும். தன்னைத் தான் வெல்வதே பெரு வீரம் என்றும் கொள்வர். இத்தகு ஆன்மபலமாகிய வீரத்திற்கும் வீரபத்திர வணக்கம் துணை செய்யும் எனலாம்.
வீரபத்திரரின் யாக சங்காரம் என்பது பல செய்திகளைப் பக்திமான்களாய சைவசமயிகளுக்கு எடுத்துரைக்கிறது. சிவவழிபாட்டாளர்கள் அந்த தேவதையை, இந்தத் தேவனை, அந்தக் கிரஹத்தை, இந்தக் கிரஹத்தை என்று ஓடி ஓடி வழிபடத்தேவையில்லை.. அவற்றை எல்லாம் தண்டித்து ஆட்கொண்டவராய வீரபத்திரன் விரைகழலை வழிபட்டால் போதுமல்லவா..?
இப்பொருள் பெற திருநாவுக்கரசர் பாடுகிறார்.

“எச்சன் நினைத் தலை கொண்டார் பகன் கண் கொண்டார்
இரவிகளில் ஒருவன் பல்  இறுத்திக் கொண்டார்
மெச்சன் வியத்திரன் தலையும்  வேறாக் கொண்டார்
விறல் அங்கி கரங் கொண்டார்  வேள்வி காத்த
உச்ச ந(ய)மன் தாள் அறுத்தார்  சந்திரனை உதைத்தார்
உணர்விலாத் தக்கன் தன்  வேள்வியெல்லாம்
அச்சமெழ அழித்துக் கொண்டு அருளும் செய்தார்
அடியேனை ஆட்கொண்ட அமலர் தாமே”

No comments:

Post a Comment